என்னுடைய அடுத்த படமான ஒருதலைக் காதல் கோடிகளை நம்பி எடுக்கப்படும் படமல்ல, காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கப்போகும் படம், என்கிறார் டி ராஜேந்தர்.
மேலும் அடுத்த ஆண்டு தான் இயக்கும் படத்தில் அவரது இளைய மகன் குறளரசன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு திரைப்பட இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான விஜய டி. ராஜேந்தர் வந்தார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இயக்கி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு தலைக்காதல்’ சினிமா படப்பிடிப்பு நடத்த கொல்லிமலை முதல் இமயமலை வரை சென்று வந்தேன். இமயமலை சென்ற போது திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள நினைத்தேன். அதற்கு முன்பாக எங்கள் திருக்கயிலாய பரம்பரை, எங்கள் மண்ணின் குரு திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற வந்தேன்.
ஒரு தலைக்காதல் படம் கோடிகளை நம்பி எடுக்கும் படம் அல்ல. காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கும் படம். இந்த படம் வெளிப்புற படப்பிடிப்பில் தான் உருவாக போகிறது.
எனது மகள் இலக்கியாவுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து ஜாதக பொருத்தமுள்ள மணமகனை தேடி வருகிறேன். இலக்கியா திருமணம் முடிந்தவுடன் மூத்த மகன் நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெறும்.
அடுத்த ஆண்டு நான் இயக்க உள்ள படத்தில் எனது இளைய மகன் குறளரசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன்.
பதவிக்காக வாழ்வதா…
பொதுவாழ்க்கையில் என்னைப் போல தூய்மையான ஒருவனை காட்ட முடியுமா… ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.
இதைப்போல அன்றைய ஆட்சியாளர்கள் பதவியை துறக்க முன்வந்திருந்தால் நிச்சயமாக ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.
தமிழ் உணர்வு மங்கிவிட்டதா? பின்தங்கிவிட்டதா? என்ற கேள்வி தான் என் மனதில் எழுந்துள்ளது. பதவிக்காக மட்டும் வாழக்கூடாது. மக்கள் பணி மட்டுமே எங்கள் பணியாகும்,” என்றார்.
No comments:
Post a Comment