சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின், அறிவிக்கப்பட்ட முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கோவையில் கடந்த 23, 24ம் தேதிகளில் நடந்து முடிந்துள்ளது.தி.மு.க.,வின் தலைவர் பதவியில் கடந்த 42 ஆண்டுகளாக இருந்துவரும் கருணாநிதி, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று விலக வேண்டும். அவருக்குப் பதில் ஸ்டாலினை தலைவர் பதவிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, செயற்குழு கூட்டத்திற்கு முன் இருந்தது.
இந்த முயற்சிக்கு அழகிரி போட்ட முட்டுக்கட்டையால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. மாவட்ட அமைப்புகளை கலைத்துவிட்டு பார்லிமென்ட் குழு, சட்டசபை குழு என்ற அடிப்படையில் கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்கலாமா என்று கட்சித் தலைமை கருத்துக் கேட்டது.தி.மு.க.,வின் நிர்வாக அமைப்பில் பெரிய மாற்றங்கள் வரப் போகின்றன என்ற எதிர்பார்ப்பில் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை தலைமைக்கு எழுதிக் குவித்தனர். குறுநில மன்னர்களாக வலம் வரும், கட்சி மாவட்டச் செயலர்களின் சாம்ராஜ்யங்கள் முடிவுக்கு வரப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, தொண்டர்கள் மத்தியில் மலையாக உயர்ந்தது.
அதற்கு காரணம், அவர்கள் இத்தனை நாட்களாக கட்சியினர் மத்தியில் சம்பாதித்துள்ள வெறுப்பு தான்.விழுப்புரத்தில் பொன்முடி, திருச்சியில் நேரு, அவர் தம்பி, தஞ்சையில் பழனிமாணிக்கம், அவர் தம்பி, ராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், தூத்துக்குடியில் பெரியசாமி, அவர் மகள், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விருதுநகரில் சாத்தூர் ராமச்சந்திரன், திண்டுக்கலில் ஐ.பெரியசாமி,கோவையில் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர், தனி சாம்ராஜ்யங்களை உருவாக்கிக் கொண்டு, கொடிகட்டிப் பறந்து வருகின்றனர்.
இந்த மாவட்டங்களில், கட்சியை விட, தங்களை முன்னிலைப்படுத்தியே கட்சி இயங்க வேண்டும் என்பதில், இவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள்,"கலைஞர் வாழ்க' என்று சொல்வதை விட, "பொன்முடி வாழ்க, நேரு வாழ்க, வீரபாண்டி ஆறுமுகம் வாழ்க' என்று சொல்வதையே விரும்புகின்றனர். தி.மு.க., என்றாலே அந்த மாவட்டத்தில் தாங்கள் தான் என்றிருக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாக உள்ளனர். அதை மீறுவோர் கட்சியிலேயே இருக்க முடியாது' என்பது அந்தந்த மாவட்ட அடிமட்டத் தொண்டர்களின் புலம்பலாக உள்ளது.
இந்த சாம்ராஜ்யங்களுக்கு விடிவு வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பில், கோவையில் நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மாநாட்டுக்கு வருவதைப் போல் தொண்டர்கள் குவிந்தனர். வழக்கமாக, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். ஆனால், இந்த முறை கோவையில் பெரிய அளவில் கூட்டப்பட்டதால், கட்சியின் வரலாற்றையே திருத்தி அமைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், இந்த பொதுக்குழுவும் வழக்கமான பொதுக்குழுவாகவே முடிந்து விட்டது.
"கட்சித் தலைமையில் மாற்றம் இல்லை' என்ற அறிவிப்பு தலைமை மீது இருந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கட்சியை திருத்தி அமைக்க, டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து உப்பு சப்பில்லாமல் முடித்து விட்டதால், தொண்டர்கள் இமாலய ஏமாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். "ஸ்பெக்ட்ரம்' வழக்கில் சிறையில் உள்ள கனிமொழிக்கு வரிந்து கட்டிக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றிய கட்சியின் பொதுக்குழு, தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சராக இருந்து அதே வழக்கில் சிறையில் உள்ள ராஜாவைப் பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாதது தொண்டர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
தோல்விக்கான காரணம் மாவட்டச் செயலர்களின் குறுகிய அரசியல் தான் என்பதை பொதுக்குழுவில் பேசியவர்கள் இலைமறை காயாக வெளிப்படுத்தினர். அதை தலைமை புரிந்து கொண்டு, முழுமையாக மாற்றி அமைத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல், பெயருக்கு குழுவை நியமித்து விட்டு, குற்றச்சாட்டுக்கு ஆளாகும் மாவட்டச் செயலர்களையே தலைமை தன்னுடன் காரில் ஏற்றிச் சென்றதைப் பார்த்த தொண்டர்கள் பெரும் ஏமாற்றத்தில் தங்கள் ஊருக்கு திரும்பினர். இந்த மனக்குறையை சரிசெய்யாதவரை தி.மு.க.,வால் எழுந்திருக்க முடியாது என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment