நிலப்பறிப்பு வழக்கின் கீழ் மதுரை திமுக மாநகர் மாவட்டச் செயலர் கோ.தளபதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற "பொட்டு' சுரேஷ் உள்ளிட்ட 4 பேர், மதுரை புறநகர் குற்றப்பிரிவு போலீஸôரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி, மதுரை முதலாவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், பொட்டு சுரேஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்த தகவல், பாளையங்கோட்டை சிறையில் உள்ள பொட்டு சுரேஷுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர். பொட்டு சுரேஷ் உள்ளிட்டோர், திருமங்கலம் அருகே சிவனாண்டி - பாப்பா ஆகியோரது நிலத்தைப் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொட்டு சுரேஷ் மீது மேலும் ஒரு நிலப்பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் திருநகர் போலீஸôர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட பிரச்னையில், அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
ஒருவர் மீது 3 வழக்குகள் இருக்கும் நிலையில், அவரால் பொது அமைதிக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கும் என்று காவல் துறை கருதினால், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய பரிந்துரைக்கலாம் என்றும், அதனடிப்படையில்தான் பொட்டு சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment