Search This Blog

Monday, 25 July 2011

ராஜபக்சவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு etamilnews

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,
நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,
உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.
மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.
விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment