Search This Blog

Wednesday 27 July 2011

ராமதாஸின் இரட்டை நாக்கு...oosssai.blogspot.com

எதிர்க்கட்சி வரிசையிலிருக்கிற ஒரு கட்சி, திட்டுவதாக இருந்தால் யாரை திட்ட வேண்டும், விமர்சிக்க வேண்டும். நிச்சயம் - ஆளுங்கட்சியை, ஆளுங்கட்சி செய்கின்ற தவறை விமர்சிக்க வேண்டும். ஆனால் ராமதாஸ் அன் சன், அதற்கு மாறாக தேர்தல் முடிவு வந்த நாளில் இருந்தே தி.மு.க வை திட்டி தீர்த்து கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக தே.மு.தி.க வை திட்டுகிறார்கள்.

சரி, தி.மு.க வை விமர்சிக்க கூடிய காரணங்களாக ஸ்பெக்ட்ரம் முறைகேடு, நில மோசடி, வாரிசு அரசியல் (அதை பற்றி ராமதாஸால் பேச முடியாது) போன்றவை உள்ளனவா? கிடையவே கிடையாது. சட்டசபை தேர்தலில் கிடைத்த தோல்வியை ஜீரணிக்க முடியாமல் "தி.மு.க வால் தான் தோற்றோம், தி.மு.க வுக்கு எதிராக விழுந்த வாக்குகளே ஒழிய, பா.ம.க வுக்கு எதிரான வாக்குகள் அல்ல" என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் போல சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

தேர்தலின் போது தி.மு.க கூட்டணியிலிருந்த வேறு எந்த கட்சியின் தலைமையும் (காங் உட்பட) இன்று வரை இந்தளவு தி.மு.க வை கடுமையாக விமர்சிக்கவில்லை. அதனால் தான் ஊடகங்கள் எப்போதும் "பா.ம.க அணி மாறுவதை கேலி பேசுகின்றன". அணி மாற தயாராகிவிட்டது போல் தெரிகிறது என்று சொல்லப்படுகிறது. "திருமாவையும் தனித்து போட்டியிட" சொல்லி ஆசை காட்டுகிறார். ஆனால் இன்றைக்குள்ள சூழலில் பா.ம.க தயவு யாருக்கும் தேவை இல்லை.

வெற்றி பெற்றால் - அந்த வெற்றியில் அனைவருக்கும் பங்குண்டு என்பார்கள். தோற்றால் உன்னால் தான் தோற்றேன் என்பார்கள். ஒவ்வொரு முறையும் பா.ம.க அப்படி தான் பேசும். கலைஞர் அழகாக சொல்லி விட்டார், "நான் தான் தோல்விக்கு காரணம்" என்று. பா.ம.க, கொ.மு.க போன்ற சாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்த தான் தான் தோல்விக்கு காரணம் என்று அழகாக சொல்லி விட்டார்.

தலைவனுக்கு அழகு தோல்வியை ஒப்பு கொள்ளுதல் - யாரையும் சுட்டிக் காட்டாமல் ஒப்பு கொள்ளுதல்... மற்றும் வெற்றி பெற்றால் அதற்கு அனைவரும் காரணம் என்று அனைவரையும் பெருமைபடுத்துதல். அது தான் தலைவனின் மாண்பு. ஆனால் ராமதாஸ் இன்னும் அந்த பக்குவத்திற்கு வரவில்லை. இன்றைக்கு தவறான கட்சியாக, பணம் கொடுத்து வெற்றியை வாங்க துடிக்கும் கட்சியாக தெரியும் தி.மு.க- நேற்று வரை பா.ம.க வுக்கு எப்படி இருந்தது.

ராமதாஸ் தான் தன் குடும்ப திருமணத்திற்கு பத்திரிகை கொடுக்கும் சாக்கில் கோபாலபுரம் சென்றார். "கலைஞரை போல நானும் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்றார். கூட்டணியும் வைத்தார். ஆனால் இன்று ராமதாஸ் தம் குடும்பத்தாருடன் சந்தோஷமாக தான் உள்ளார். யார் கண் பட்டதோ தெரியவில்லை? கலைஞர் குடும்பம் என்ன கதியில் உள்ளது. மகள் சிறையில்... மகன்கள் தலைமை பதவிக்கு போட்டி போட்டு கொண்டு, ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு... பேரன்கள் சிறைக்கு செல்ல தயாராக...

ஆறுதலாக இருக்க வேண்டிய கூட்டணி கட்சிகள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது. என்ன செய்ய. இது தான் அரசியல். சென்னை, வேளச்சேரியில் பாமக சார்பில் "அரசியல் கட்சிகளும், தேர்தல் செலவுகளும்' என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் போட்டார்கள். ராமதாஸின் பேச்சிலிருந்து ஒரு பகுதி.

"பென்னாகரம் இடைத்தேர்தலில் பத்தாயிரம் வரை வாக்காளர்களுக்கு தரப்பட்டிருக்கிறது. அங்கு வெற்றிபெறுவதற்கு 75 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. 62-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அண்ணாதுரை, நடேச முதலியாரிடம் தோற்றுப் போனார். இது தொடர்பாக அண்ணா கடிதம் எழுதியுள்ளார். அதில், "காங்கிரசாரின் பணத்தால் தோற்றோம்' என்று எழுதியிருக்கிறார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் தவறான செயல் அப்போதே இருந்தாலும், அதை எதிர்த்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இப்போது அதிகமாக இருக்கிறது. பாமக இனி துண்டறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எந்தத் தேர்தல் செலவும் செய்யப் போவதில்லை.".  

தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றிருந்தால் - இப்படி ஒரு கூட்டம் போட்டு தி.மு.க வாக்குக்கு பணம் கொடுத்த கதையை சொல்லி இருப்பார்களா. வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றியை பெற நினைப்பது எவ்வளவு கேவலமோ, அதே அளவு கேவலம், "நான் உன் சாதிக்காரன். அதனால் நீ எனக்கு தான் வோட்டு போடணும்" என்று கேட்பதும். பென்னகரத்தில் அ.தி.மு.க மூன்றாமிடம் பெற்றது. அதனால் பா.ம.க வளர்ந்து விட்டதாக பெருமை அடித்து கொண்டார்கள். உண்மை என்ன?

அன்று, அங்கே தி.மு.க முதலிடம் பெறவில்லை. பணம் முதலிடம் பெற்றது. பா.ம.க இரண்டாம் இடம் பெறவில்லை. சாதி அரசியல் இரண்டாமிடம் பெற்றது. ஆனால் பொது தேர்தலில், மக்கள் பணத்தையும் ஒதுக்கினார்கள். சாதீயையும் ஒதுக்கி தள்ளினார்கள். "வாக்குக்கு பணம் கொடுப்பதை தவறாக சொல்லும் பா.ம.க - தேர்தல் ஆணையத்தை இன்று வரை ஒரு வார்த்தை பாராட்டி இருக்குமா?"



அன்புமணி ராமதாஸ் சினிமா நடிகர்களை சாடுவதையே தொழிலாக கொண்டுள்ளார். ஊர் ஊராக சென்று தம் கட்சிக்கு தொண்டர்களை சேர்க்க போவதாக சொல்லி இருக்கிறார். ஆனால் பா.ம.க வின் இன்றைய நிலை என்ன. பொது தேர்தலில் சோழவந்தானில் பா.ம.க சார்பில் போட்டியிட்டு தோற்ற இளஞ்செழியன் கொல்லப்பட்டிருக்கிறார். அவர் மீது பல் வேறு வழக்குகள் இருந்தனவாம். ஒரு உயிரின் மதிப்பு மருத்துவருக்கு தானே தெரியும். வன்முறையை அரசியலில் இருந்து ஒதுக்க வேண்டாமா?வோட்டுக்கு பணம் கொடுப்பதை விட பாதகமானது - அரசியலில் கிரிமினல்கள் ஆஜராவது.

இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு காரணம் கூட, அரசியல்வாதிகளின் கைத்தடிகளினால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதனால் கூட. போதை பொருளுக்கு எதிராக குரல் கொடுக்கும் மருத்துவர்கள், அரசியலில் இருந்து வன்முறை மற்றும் வன்முறையாளர்களை ஒழிப்போம் என்றும் குரல் கொடுக்கலாம். அதுவே இன்றைக்கு நாட்டிற்கு தேவை.

No comments:

Post a Comment